நெருங்கும் மக்களவைத் தேர்தல்… பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடக்கம்..!

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கவுள்ளது. இது பெரிய அளவிலான கூட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் பாஜக தேசியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களை ஆளும் பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள், தேசிய, மாநில அளவிலான நிர்வாகிகள் என மொத்தம் 11,500 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கவுள்ளது. நாளை (பிப்ரவரி 18) நடைபெறும் இறுதி நாள் கூட்டத்தை கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கிவைப்பார். அன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நிறைவு உரையாற்றவுள்ளார். மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து நிர்வாகிகளிடையே கலந்தாலோசனை நடத்த இந்த பாஜக தேசியக் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், பல்வேறு அணிப் பிரிவினரும் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு முன்பு மக்களவைத் தேர்தலை யொட்டி பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் 2014, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது 11,500 பேர் இந்த கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதால் இது மெகா கூட்டமாக இருக்கும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மட்டும் 370-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.