பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்… ஆளுநர் தேடுதல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் – அமைச்சர் பொன்முடி.!

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிட்டதை சட்டப்படி எதிர்கொள்வோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி, துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.

உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி, நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதுவரை எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விபரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது.

அரசின் அலுவல் விதிகளின்படி, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது. தெலங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022ல் நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இது நாள்வரை மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்” என தெரிவித்து உள்ளார்..