கோவையில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவம்: ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உள்பட 3 வீடுகளில் 31 பவுன் நகை திருட்டு-பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை..!!

பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல்
எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது.

அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ்
வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை
வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து
அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வழக்கம்போல உமா வேலைக்கு வந்தார். அப்போது மணிகன்ட ராஜேசின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மணிகன்ட ராஜேசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில்
இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின், மோதிரம், தங்க
கடிகாரம் உள்பட 18 பவுனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது
தெரியவந்தது. இதுகுறித்து மணிகன்ட ராஜேஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார்
அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை
நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில்
பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை
ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து
ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற
திருடர்களை தேடி வருகின்றனர்.

பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). என்ஜினீயர். இவர் கோவை துடியலூரை
அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் துடியலூரில்
உள்ள வனிக வளாகத்துக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய பிரகாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த
12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று துடியலூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (36).
தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு செல்வபுரத்தில் உள்ள
தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய அவர் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷாஜகான் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.