தொடர் மழை எதிரொலி- வேகமாக நிரம்பும் கோவை, நீலகிரி அணைகள்..!!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீரின் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி பில்லூர் அணை உள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் 97 அடியாகவே நீடிக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2-வது நாளாக இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. கேரளாவில் தற்போது பெய்து வரும் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 41.25 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து அதிகாரிகள் நீர் வரும் அளவையும், நீர்மட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் பரம்பிக்குளம், ஆழியார் அணை, சோலையார் அணைகளின் நீர்மட்டமும் தொடர் மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீா்த்தேக்கங்களில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி முக்குருத்தி அணையில் மொத்த கொள்ளளவான 18 அடியில் 17 அடிக்கும், பைக்காரா அணையில் 100 அடியில் 85 அடிக்கும், சாண்டிநள்ளா அணையில் 49 அடியில் 45 அடிக்கும் தண்ணீர் உள்ளது. கிளன்மாா்கன் அணையில் 33 அடிக்கு 32 அடிக்கும், மாயாறு அணையில் 17 அடிக்கு 16.5 அடிக்கும் மேல்பவானி அணையில் 210 அடிக்கு 205 அடிக்கும், பாா்சன்ஸ்வேலி அணையில் 77 அடியில் 74 அடிக்கும் நீர் இருப்பு உள்ளது. போா்த்திமந்து அணையில் 130 அடிக்கு 125 அடிக்கும், அவலாஞ்சி அணையில் 171 அடிக்கு 158 அடிக்கும், எமரால்டு அணையில் 184 அடியில் 150 அடிக்கும், குந்தா அணையில் 89 அடிக்கு 88.5 அடிக்கும், கெத்தை அணையில் 156 அடிக்கு 154 அடியும் தண்ணீர் உள்ளது.