மேலும் 9 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கம்- அமேசான் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

ர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசானில் இருந்து அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 வேலைகள் குறைக்கப்பட உள்ளது. புதிய பணிநீக்கங்கள் பெரும்பாலும் Amazon Web Services அல்லதுAWS, Amazon People experience மற்றும் Technology, விளம்பரம் மற்றும் வீடியோ கேமர்களுக்கான லைவ் ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களை தான் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த சில வாரங்களில் ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட 9000 பேர் அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமேசான் நிறுவனம் முன்னெடுக்கும் இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும்.

நிச்சயமற்ற பொருளாதாரம்” மற்றும் “விரைவான பணியமர்த்தல்” ஆகிய காரணங்களால், செலவினங்களை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிற்பகுதியில் வெளியான அறிவிப்பின்படி, கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் பணியிடங்களை அமேசான் நிறுவனம் குறைத்தது. ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாபெரும் பணிநீக்க நடவடிக்கை காரணமாக, அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தன. இதனால் அதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 675 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.5,540 கோடியை இழந்தார். இந்நிலையில், வெறும் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் நிறுவனம் எடுத்துள்ளது.

இதனிடையே, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.