ஆளுநரை சந்திக்க அண்ணாமலை திட்டம்… எதற்கு தெரியுமா..?

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தில் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறினார். ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை திமுக அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழக மக்களுக்கு சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். கடன் சுமையில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும், தமிழகத்திற்கு புதிதாக வருவாயை ஈட்ட அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.