ஏய்.. நீ பாத்தியா” பத்திரிக்கையாளர்களை தாக்க முயன்ற பாஜக-வினர்.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை..!!

சென்னை : பாஜக நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளரை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் முறையிட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்கள் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 12 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை சென்னை திரும்பினார். இன்று தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு அண்ணாமலை வருகை தந்தார். அங்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை, அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் பத்திரிகையாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவினர் சிலர் கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாஜகவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பத்திரிகையாளர்களை பாஜக நிர்வாகிகள் சிலர் ‘மயங்கி விழுந்தத நீ பார்த்தியா?’ என ஒருமையிலும் ஆவேசமாக பேசினர். கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை தாக்க முயன்ற பாஜகவினர் பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். தொடர்ந்து, பாஜகவினர் பத்திரிகையாளர்களை அவமதிப்பதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், பத்திரிகையாளரை தாக்க முயன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் அண்ணாமலை அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.