கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு மாலையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த முதியவர் – திருச்சியில் வினோதம்.!!

அரசியல் கட்சிகள் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இன்று முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு வேடிக்கைகளுக்கும் வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. மக்களின் மனதில் இடம்பெறவும் அவர்கள் வாக்கு அளிப்பதை உறுதி செய்யவும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் பலவகையான உத்திகளை கையாளுவர். அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்யவே நான் வித்தியாசமாகத் தான் வருவேன் என ஒரு வேட்பாளர் கவனம் ஈர்த்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கழுத்தில் கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு அட்டைகளை மாலையாக அணிந்து வந்தார். டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்த வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் இவைகளை மாலையாக அணிந்து வந்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன், “சுதந்திர நாட்டில் சுதந்திரம் பல நேரங்களில் இல்லை. டிஜிட்டல் மயம் என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் இன்னும் வரவில்லை. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தவில்லை. தனியார் மற்றும் அரசு வங்கிகளில் கொடுக்கப்பட்ட ஏடிஎம் டெபிட் கார்டுகள் பல வங்கி ஏடிஎம்களில் செயல்படவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு பணம் கட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை” எனக் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா கருத்தை வலியுறுத்தி வேட்பு மனு தொகை கிரெடிட் கார்ட் மூலம்தான் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன..