லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து ருசித்த காட்டு யானை – தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கின்றன. இந்த நிலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கரும்பு லாரியை கண்ட ஒரு காட்டு யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி லாரியை வழிமறித்தது. யானை வழிமறிப்பதை கண்டு அச்சமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இதனால் அச்சாலையில் வந்த மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கரும்பு பாரம் ஏற்றிய லாரியின் அருகே மெதுவாக வந்த காட்டு யானை தனது தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை பறித்து கீழே தார் சாலையில் போட்டு ஒவ்வொரு துண்டாக தும்பிக்கையால் எடுத்து சுவைத்தது. இதைக் கண்டு வாகன ஓட்டுனர்கள் மற்றும் அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் லாரியை வழிமறித்த காட்டு யானை மெதுவாக சாலை ஓரம் சென்றதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.