மசூதியில் தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும் பேச்சை நிறுத்திய அமித் ஷா – கைதட்டி ஆதரவு அளித்த மக்கள்..!

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கையில், மசூதியில் தொழுகை நடக்க, அது முடியும் வரை, அமித் ஷா தனது பேச்சை நிறுத்தியது, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார்.வடக்கு காஷ்மீரின், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷவ்கத் அலி ஸ்டேடியத்தில் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கையில், அருகில் உள்ள மசூதியில் தொழுகை அழைப்புக்கான சத்தம் கேட்டது. உடனே பேச்சை நிறுத்திய அமித் ஷா, ‘இது என்ன சத்தம்’ என கேட்டார். மேடையில் இருந்தவர், ‘மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடப்படுகிறது’ என்றார்.உடனடியாக அமித் ஷா பேச்சை நிறுத்தினார். தொழுகை அழைப்பு முடியும் வரை அவர் மேடையில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அமித் ஷாவின் செயலுக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆதரவு அளித்தனர். அழைப்பு முடிந்ததும், ”இப்போது நான் பேசலாமா,” என கூட்டத்தை பார்த்து அமித் ஷா கேட்டார். ‘பேசலாம்’ என பதில் வந்ததும், அவர் பேச்சை தொடர்ந்தார்.