தனியாக இருக்கும் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு படுகொலை செய்து நகை திருட்டு-கோவையில் பயங்கரம் ..!

கோவை அருகே உள்ள சிந்தாமணி புதூர், காந்திநகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சரோஜினி ( வயது 82 )இவருக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சரோஜினியின் கணவர் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் சரோஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று மதியம் செல்வ லட்சுமிபுரத்தில் வசிக்கும் சரோஜினியின் மூத்த மகன் ரவிச்சந்திரனுக்கு செல்போனில் பேசினார். உங்கள் அம்மா காலையில் இருந்து வீட்டிற்கு வெளியே வரவில்லை. பால் பாக்கெட் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறினார் .இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக தாய் சரோஜினி வீட்டிற்கு வந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது சரோஜினியின் கைகள், கால்கள் கட்டபட்டு வாய் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டபட்டிருந்தது. உடனே அவர் அருகில் சென்று பார்த்த போது சரோஜினி பிணமாக கிடப்பது தெரியவந்தது . இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் சரோஜினியை மர்ம நபர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு வாயை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி, கொலை செய்து விட்டு அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, விரலில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவு பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..