ஸ்கூட்டர் – பைக்கில் செல்லும் வாலிபர்களிடம் உதவி கேட்பது போல் நடிக்கும் இளம்பெண்: கத்தி முனையில் கொள்ளையடிக்கும் கும்பல் கைது..!

கோவை :  புதுசித்தாபுதூர் சரோஜினி விதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் பிரவீன் ராஜ் ( வயது 25) டிரான்ஸ்போர்ட் ஏஜெண்டாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஸ்கூட்டரில் சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கதக்க  ஒரு பெண் உதவி கேட்பது போல நடித்து ஸ்கூட்டரை நிறுத்தினார் .அப்போது மறைவில் பதுங்கியிருந்த 3பேர் ஓடிவந்து பிரவீன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஸ்கூட்டர் ,செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து பிரவீன் ராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து சூலூர் பட்டணத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி ரிதன்யா (வயது 20 )திருப்பூர் பல்லடம் தாராபுரம் ரோட்டில் உள்ள ராஜேஷ்குமார் (வயது 24) திருப்பூர் சின்னக்கரையை சேர்ந்த இளம் தமிழன் ( வயது 29 )தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் .ஸ்கூட்டர் செல்போன்பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் இதே கும்பல், கோவை வெள்ளலூர், அவுசிங் யூனிட்டில் வசிக்கும் ஹக்கீம் ( வயது 29) என்பவர் செட்டிபாளையம்- பல்லடம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இதே போல வழிமறித்து அவரிடம் இருந்த பைக், செல்போன் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது .இவைகளும் மீட்கப்பட்டன.இந்த கும்பல் மீது பல்லடம் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.