தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான லண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நாளை நடைபெற உள்ள ‘சில்வர்ஸ்டோன் ரவுண்ட்’ பந்தயத்தைக் கொடி அசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். அதிலும் குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரமும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இப்போட்டியில் களம் இறங்குக உள்ளனர். அவர்களை நேரில் கண்டு உற்சாகப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் சர்வதேச விளையாட்டு மேடையில் ஒரே புள்ளியில் இணைய உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்களிடையேயும், விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் அளித்த பேட்டியில், ‘இந்த கார் பந்தயத்தைப் பார்ப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய கார் பந்தயத் தடங்களைப் பார்வையிடுவதற்கும், என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. முதலமைச்சர் விஜய் எனது அழைப்பை ஏற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது கடுமையான பணிச்சுமைக்கு இடையிலும் முதலமைச்சர் விஜய் இங்கு வந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். லண்டனில் நடைபெறுவதைப் போலச் சென்னையிலும் கார் ரேசிங் போட்டிகள் நடைபெற வேண்டும். கார் ரேசிங் மீதான எனது ஆர்வத்தை முதலமைச்சர் விஜய்யும் அறிந்து வைத்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.






