சிவகாசி : சுதந்திர தினத்தையொட்டி சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நமது நாடு ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள்தான் நாடு முழுவதும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி, சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தேசியக் கொடிகள் பல வடிவங்கள் மற்றும் பல வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொடிக்கம்பத்தில் பறக்க விடும் துணிக்கொடி முதல் காகிதம், பிளாஸ்டிக், வார்னீஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், ஸ்ட்ரா, ஸ்டிக் பைல், ஸ்டாண்ட், ஐடி கார்டு, டபுள் சைடு, இந்தியா வரைபடம், மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசியக் கொடிகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அழகிய வடிவங்களுடன், கண்ணைக் கவரும் டை கட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொப்பி போல தலை, கைகளில் மாட்டிக் கொள்ளும் தேசியக்கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை நாடு முழுவதும் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தேசியக் கொடி தயாரிப்பாளர் காசிராஜன் கூறுகையில், ”எங்களது அச்சகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக் கொடி தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரபலமான பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசியக் கொடிகளை ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது.
அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கான தேசியக் கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது. தற்போது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசியக் கொடிக்கான ஆர்டர்களும் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த 2 மாதங்களாக தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.
Leave a Reply