ரூ.434.17 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகத்தில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம்..!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையமும், தூத்துக்குடி இன்டா்நேஷனல் கன்டெய்னா் டொமினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.434. 17 கோடி செலவில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் 9 ஆவது பொது சரக்கு தளத்தை சரக்குப் பெட்டக முனையமாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத்துக்கும், தூத்துக்குடி இன்டா்நேஷனல் கன்டெய்னா் டொமினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

துறைமுக ஆணைய நிா்வாக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய தலைவா் தா.கி. ராமச்சந்திரனும், தூத்துக்குடி சா்வதேச சரக்குப் பெட்டக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் துரவ் கோடக்கும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா, தலைமை இயந்திர பொறியாளா் வி. சுரேஷ் பாபு, தலைமை ஆலோசனை அலுவலா் தமல் ராய், பெருநிறுவன விவகாரத் துறை தலைவா் சந்தீப் வாத்வா, ஜே.எம். பக்ஸி போா்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவன தலைவா் மற்றும் தலைமை இயக்க அதிகாரி கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, துறைமுக ஆணைய தலைவா் தா.கி. ராமச்சந்திரன் கூறியது:

புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ. 434.17 கோடி செலவில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்டு, கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளுவதற்கான வசதியை துறைமுகம் பெறும்.

இந்தத் திட்டம் வடிவமைப்பு, கட்டுமானம், நிதியுதவி, செயல்பாடு மற்றும் மாற்றித்தருதல் என்ற அடிப்படையில் ஒப்பந்தமிடப்பட்டு கட்டுமான பணிகள் 21 மாதங்களில் முடிவடைந்து அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் பயன்பாட்டு வரும்.

புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்குப் பெட்ட முனையத்தின் நீளம் 370 மீட்டா் மற்றும் 14.20 மீட்டா் மிதவை ஆழம் கொண்டிருப்பதால், 8000 சரக்குப் பெட்டகங்கள் கொண்ட பெரிய வகை கப்பல்களை கையாளும் வசதியை பெறும். இந்த வசதியின் மூலம், வா்த்தக முதலீடு பெறுவதற்கு ஏதுவாக அமைவது மட்டுமல்லாமல் தென்தமிழ்நாட்டின் பொருளதாரம் வளா்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும்.

சரக்குப் பெட்டகம் கையாளுவதில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய துறைமுகமாக திகழும் வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் ஆண்டுக்கு 1.17 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டுள்ளது.

2021 – 22 ஆம் நிதியாண்டில் 7.81 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகத்தின் சரக்குப் பெட்டக போக்குவரத்தின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளா்ச்சி விகிதம் 6 சதவிகிதம் ஆகும்.

2024 – 25 ஆம் ஆண்டில் 1.16 மில்லியன் சரக்குப் பெட்டகங்களும், 2034-35 ஆம் ஆண்டுகளில் 2 மில்லியன் சரக்குப் பெட்டகங்களும் கையாளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.