ஆக்ரோஷமான மனோஜ் பாண்டியன்.. அமைதிப்படுத்திய கே.பி. முனுசாமி… உச்சகட்ட பரபரப்பான சட்டப்பேரவை..!

ன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. அனைத்துக் கட்சி சார்பிலும் ஒருவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

அப்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்கிறோம்…” என்று பேசினார். ஓ.பி.எஸ். பேசியதும் இருக்கையில் இருந்து எழுந்த இ.பி.எஸ், “ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் என பேச அனுமதித்ததன் பேரில் தான் அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிவிட்டார். எங்களிடம் தான் பெரும்பான்மை இருக்கிறது. நான் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்” என்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, “முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் பேச அனுமதி கேட்டதால் அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் கோஷங்களை எழுப்பினர். அதேபோல், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களும் கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்திற்கு மேல், மனோஜ் பாண்டியன் திடீரென ஆவேசமாக சபாநாயகரை நோக்கி தங்கள் விளக்கத்தை சொன்னார். அந்த சமயம், இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ எழுந்து மனோஜ் பாண்டியனை தாக்கும் வகையில் ஆக்ரோஷமாக கூச்சலிட்டபடி வந்தார். அவரை அங்கிருந்த இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள் தடுத்தனர். அதேபோல், மனோஜ் பாண்டியனும் அவரை நோக்கி தாக்குகிற வகையில் ஆக்ரோஷமாக செல்ல முயன்றார்.

அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் கையை இழுத்து அவரை தடுத்தார். ஆனாலும், மனோஜ் பாண்டியன் மற்றும் இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி, இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். அதிமுகவின் இரு அணி எம்.எல்.ஏக்களும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஆக்ரோஷமாக கோஷமிட்டதாலும், தாக்கும் வகையில் நடந்துகொண்டதாலும் சட்டமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.