தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின் படி11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்திட உத்தரவிட வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின் படி பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இன்று பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலையிலிருந்து அவர்களுக்கு விருப்பமான பிரிவுகளை தேர்ந்தெடுத்து பதினோராம் வகுப்பில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பேரவையினர் கூறுகையில், கோவை மாவடத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறினர். மேலும் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர் ஆகியோர் இல்லாததால் அம்மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கடந்த முறை இவற்றையொல்லாம் கண்காணிக்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அக்குழுவும் இல்லாததால், மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக மாணவர்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் அலுவலர்களின் நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்..