சென்னை புழல் மத்திய சிறையில் “சிறைவாசிகள் காத்திருப்பு அறை” திறப்பு-சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் வருகை .!!

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று 23.05.23 பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் T.ராஜா தலைமையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எம்.சுந்தர், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் மற்றும் நீதியரசர்  ஜி.சந்திரசேகரன் ஆகியோர் சிறைக்கு வருகை தந்தனர்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களால் சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைவாசிகள் காத்திருப்பு அறை திறந்து வைக்கப்பட்டது. சிறையினுள் நீதியரசர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பின்னர் அங்குள்ள சிறைவாசிகளை நேரில் சந்தித்து உரையாற்றும்பொழுது

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்”

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி சிறைவாசிகள் தங்களை சீர்திருத்தி கொள்ள அறிவுரை வழங்கினர்.

பின்னர் சிறைவாசிகள் நீதியரசர்களுக்கு இசை கருவிகளை தாமாக இசைத்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

சிறைவாசிகளின் இசை நிகழ்ச்சியினை ரசித்த நீதியரசர்கள் அவர்களை வெகுவாக பாராட்டினர். சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட்டு வருவது குறித்து சிறை அலுவலர்களுக்கும் சிறைவாசிகளுக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

சிறையில் சிறைவாசிகளுக்கென தயாரிக்கபட்டிருந்த உணவினை உண்டு உணவின் தரம் மற்றும் ருசி குறித்து வெகுவாக பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் நசீர் அகமது ,சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி, திருவள்ளுவர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி , தலைமை நீதித்துறை நடுவர் ஆர்.வேலராஜ் , சென்னை சரக சிறை துறை துணைத் தலைவர் ஆ.முருகேசன், புழல், மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் இரா.கிருஷ்ணராஜ் மற்றும் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தமைக்காக சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நீதியரசர்கள் வெகுவாக பாராட்டினர்.