சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த 49 வயதாகும் ஜெயசித்ரா, 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். கடந்த 27 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது சென்னை பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். ஜெயசித்ரா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனியாகவே வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அயனாவரத்தில் வசிக்கும் தனது சொந்த அக்காள் பாண்டிசெல்வி வீட்டுக்கு சென்று, அவருடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் குடும்பத்தினர், ஜெயசித்ராவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயசித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சர்க்கரை அளவு அதிகரித்து, இதயத்துடிப்பு குறைந்ததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அயனாவரம் போலீசார், ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இறப்பிற்கான முழு விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply