முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சு… சவுக்கு சங்கரை மீண்டும் பிடித்து ஜெயிலில் போட்ட கோவை போலீஸ்.!!

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசியதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கோவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

பிரபல யூடியூபராக வலம் வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது ஒரு யூடியூப் சேனலில் பெண் காவலர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்தனர்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதோடு அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பிறகு பல்வேறு புகார்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது சென்னை, சேலம், திருச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது 7 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது அவர் மீண்டும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரால் புதிய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவருடன் பேசினார். அப்போது அவர் முத்துராமலிங்க தேவர் குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.

இதையடுத்து முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை கோரி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவதூறாக பேசுதல், இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சவுக்கு சங்கரை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்ற கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்ததற்கான ஆவணங்காளை காட்டி சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்தனர். அதன்பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.