கடைசி நேரத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ ஊக்கத்தொகையைச் சமமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்க ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றமும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்ட்ரைக்கில் ஈடுபட இருந்தனர். 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அனைத்து தனியார் வங்கிகளும் நேற்று செயல்பட்டன. இதனால் இன்று முதல் செப்டம்பர் 30 வரை 3 நாட்களுக்கு வங்கிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் யுஎஃப்பியூ நிர்வாகிகள் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அகில இந்திய அளவில் நடக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் தவிர எஞ்சிய சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறை நாட்களாக அரிவிப்பது தொடர்பாக விவாதிக்க ஐபிஏ மற்றும் யுஎஃப்பியூ பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும். இந்த குழு அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்கும்.ஸ்கேல் IV மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் தொடர்பாக சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு தீர்வு காணும் வகையில், அந்த திட்டத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைப்பது குறித்து இந்திய வங்கிகள் சங்கம் உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

அதேபோல் 2024 மார்ட் 8ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் குறுப்புகளில் இடம்பெற்று இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போராட்ட திட்டங்கள் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஒத்தி வைக்க யுஎஃப்பியு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.