ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதி..!

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதியானது. இதை அடுத்து அவரை தனிமைப்படுதிக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோன்று கோவையில் உள்ள விமான நிலையத்திலும் இந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானதத்தில் பயணித்த பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நாமக்கல்லை சேர்ந்த 30 வயதான வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், கொரோனா பாதித்த வாலிபரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டது. அத்துடன் அவரை அந்த மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது:-

மத்திய – மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும், ஷார்ஜாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி அடிப்படையில் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1 – ந் தேதி முதல் தற்போது வரை 4,250 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் தற்போது ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், அந்த விமானத்தில் வந்த சக பயணிகளுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.