சபரிமலைக்கு வருகிறது புதிய விமான நிலையம்- கேரளா அரசு அரசாணை வெளியீடு..!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைகுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

இதனால், கேரளா அரசு பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை கையகப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து செருவேலி எஸ்டேட் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை மாநில அரசு நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

மேலும், செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள 307 ஏக்கர் நிலமும் விமான நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் வழங்கப்பட்டு, அதற்கான ஆய்வு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சபரிமலை விமான நிலையம் கேரளாவில் ஐந்தாவது விமான நிலையமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.