OTT தளங்களில் ஆபாச வசனங்கள் அதிகரிப்பு… அனுராக் தாகூர் எச்சரிக்கை..!

டிடி தளங்களில் நடைபெறும் நாகரீகமற்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லி: படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் தவறான வார்த்தைகள் அல்லது மொழி பயன்படுத்தப்படுவதாகவும், மற்றும் நாகரீகமற்ற செயல்கள் நடப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “தவறான மொழி, நாகரீகமற்ற நடத்தைகளைப் படைப்பாற்றல் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், ஓடிடி தளங்களில் ஆபாசமான கருத்துகள் அதிகரித்து வருவதாக எழுந்த புகாரில் அரசு தீவிரமாக இருப்பதாகவும்” தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், “இது தொடர்பான விதிகளில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், அதில் பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளார். ஆபாசத்தையும், துஷ்பிரயோகத்தையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீடியோவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறி உள்ளார்.

ஓடிடி தளங்கள் தொடர்பாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் முதல் நிலையாக இருந்து புகார்களைத் தீர்க்க வேண்டும் என்றார். அதன் மூலம் ஏறக்குறைய 90 சதவீத புகார்கள் முதல் கட்டத்திலே தீர்க்கப்பட்டு விடும் என்றும் அடுத்ததாக உள்ள அசோசியேஷன் மட்டத்தில் இருப்பவர்கள் மீதமுள்ள புகார்களைக் கவனிக்கும் பட்சத்தில் ஏறக்குறைய எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த படிகளைத் தாண்டி புகார்கள் அரசிடம் கிடைக்கப்படும் பட்சத்தில், அதன் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். இருப்பினும் கடந்த சில நாட்களாக ஓடிடி தளங்கள் தொடர்பான புகார்கள் அதிகளவில் வருவதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வீடியோவில் கூறியுள்ளார்.

அண்மையில், மும்பையைச் சேர்ந்த தனியார் மீடியா நிறுவனம் வெளியிட்ட வெப் சீரிஸ்சில், கல்லூரி காதல் தொடர்பாகக் கொச்சையான, அவதூறு பரப்பும் வகையில், ஆபாசமான கருத்துகள் இருப்பதாகக் கூறி அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஓடிடி தளங்களில் உள்ளடக்கக் கருத்துகளை முறைப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது போன்ற விதி மீறல்கள் அரங்கேறும் போது டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் விதிகளின் படி மத்திய தகவல் தொழில்நுட்பம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.