கோவையை சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன் . என்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் மூலம் வடவள்ளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ்குமார் ( வயது 42 )என்பவர் எனக்கு அறிமுகமானார் .அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகியதால் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம்..பின்னர் அவர் எனக்கு திருமண ஆகாததை தெரிந்து கொண்டார். இதை தொடர்ந்து அவர் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் என்னிடம் கூறினார். மேலும் நான் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். நானும் அதை நம்பி சரி என்று கூறினேன்.. இதற்கிடையில் அவர் ஒருநாள் என்னை வடவள்ளியில் உள்ள ஒரு வீட்டுக்கு வரச் சொன்னார். நானும் அங்கு சென்றேன். அப்போது அவர் நான் என் மனைவி விவாகரத்து செய்து விட்டேன். எனவே உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி என்னை பலாத்காரம் செய்தார். மேலும் அவர் தனது தொழில் ரீதியான தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளாக என்னிடமிருந்து ரூ. 35 லட்சம் கடன் வாங்கினார். அதில் ரூ 10 லட்சத்தை மட்டும் திரும்ப கொடுத்து விட்டார். தற்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதுடன் என்னிடம் இருந்து வாங்கிய ரூ.25 லட்சத்தை கொடுக்க மறுக்கிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது .அதன் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் தொழில் அதிபர் சந்தோஷ்குமார் மீது கொலை மிரட்டல், பலாத்காரம் , மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.