திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு 

திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் நாடார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர். ஆரம்பத்தில் ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறினார். சிறிது நாட்கள் கழித்து கணவர் இறந்து விட்டதாகவும் கூறினார்.

திடீரென ஒரு நாள் கணவன் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறி உள்ளார். ராஜேஷ் நாடார் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்து உள்ளார். மேலும் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் கூறி இருக்கிறார். இதனால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்து உள்ளார்.

இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டு உள்ளார். அப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்றும் கூறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு உள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார். ராஜேஷ் நாடார் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஹேசல் ஜேம்சின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தாய் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். ஹேசல் ஜேம்ஸ்க்கு கல்லூரியில் படிக்கும் பொழுது கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் போலீஸ் அதிகாரியின் மகன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹேசல் ஜேம்ஸ் கோவை பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதை தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.