காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடுக

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62வது கூட்டம் டெல்லியில் அதன் புதிய தலைவர் பியூஷ் சிங் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து நிர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம்.வாட்னேரே, காவிரி தொழில்நுட்ப ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் ஆணையம் ஆகியவை முன்னதாக பிறப்பித்த எந்தவித உத்தரவையும் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விகிதாச்சாரத்தின் அடிப்படையில் எங்களுக்கு வழங்க வேண்டிய நீரை காவிரியில் இருந்து திறந்து விட உத்தரவிட வேண்டும். மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு இணங்க தமிழகத்திற்கு காவிரி நீரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில், ‘‘எங்களது மாநிலத்தில் இருக்கும் அணைகளில் தற்போது 40டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கூடுதல் நீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கண்டிப்பாக ஏற்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ சாத்தியமில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆணையத்தின் தலைவர் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் கடந்த 20ம் தேதி நடந்த 147வது காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்கிறது. எனவே அதன் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். அதனை எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் இருமாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.