உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் நேற்று வழக்கம் போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஒரு மனுதாரரான இந்து தர்மா பரிஷத் அமைப்பின் நிர்வாகி கே.கே.ரமேஷ் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இந்தாண்டு மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்ப்புக்கு மாறாக 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது சட்ட விரோதம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கோரியும், கலெக்டரின் 163 தடையை ரத்து செய்யக்கோரியும் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என அரசுத் தரப்பிலும், கலெக்டர் தரப்பிலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் சொன்னது போல் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றவில்லை. எப்போதும் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்த கலெக்டர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
அமைச்சர், கலெக்டர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைச்சர் நிர்மல்குமாரின் அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து திருநகர் கம்பர் தெருவில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று சுமார் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர். அமைச்சரின் அலுவலகம் மட்டுமின்றி, அலுவலகம் அமைந்துள்ள தெரு மற்றும் பாதைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். சிலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மதுரை, நத்தம் ரோட்டிலுள்ள கலெக்டரின் இல்லம் மற்றும் முகாம் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு இரண்டாவது நாளாக தடை திருப்பரங்குன்றம் கோயிலில் சர்ச்சைக்குரிய கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நேற்று முன்தினம் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலின் மீதே தீபம் ஏற்றப்பட்டது. பாஜ, இந்துமுன்னணியினர் போராட்டம் காரணமாக மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் மலைக்கு மேலே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் கோயில் வாசல், மலைக்குச் செல்லும் படிக்கட்டு, பழனியாண்டவர் மலைப்பாதை ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் மலையேற வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல், மலைப்பகுதியில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு தொழுகை நடத்த சென்ற இஸ்லாமியர்களும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
* ஸ்தானிக பட்டர்கள் வருத்தம் திருப்பரங்குன்றம் கோயிலின் ஸ்தானிக பட்டர்கள் சார்பில் கோயில் துணை ஆணையர், அறங்காவலர்களுக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘‘அறங்காவலர் குழுவின் தீர்மானத்தின்படி, திருக்ேகாயில் கார்த்திகை தீபம் உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் ஏற்றியதாக கூறப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்தவித கடிதமும் கோயிலுக்கு கொடுக்கவில்லை.
உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்தாண்டு தபால் மூலம் கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்து நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எங்களிடம் ஆலோசிக்காமல் துணை ஆணையர் அறிக்கை வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது’’ என கூறியுள்ளனர்.








