சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான மனுக்கள் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எஸ்ஐஆர் நடவடிக்கையில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் எடுத்த முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யவோ அல்லது அவரது அதிகாரங்களைப் பறிக்கவோ வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தற்போது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்படுகின்றன எனக் கருதுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, ஒருமித்த ஒப்புதலின்றி முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த முடிவுகளைத் திரும்பப் பெறவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ உத்தரவிட நீதிமன்றம் தயங்காது எனத் தெரிவித்தனர்.
மேலும், ஞானேஷ் குமார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







