916 ஹால்மார்க் நகையில் புது மோசடி!

தங்கத்தின் விலை தற்போது சரிந்து வருவதால், நகைகள் வாங்க இதுவே சரியான தருணம் என நீங்கள் நினைத்தால், சற்று கவனமாக இருப்பது நல்லது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வரும் நிலையில் தங்கத்தில் மோசடி செய்யும் செயல்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பிஐஎஸ் (BIS) ஹால்மார்க்கிங் மற்றும் சுத்திகரிப்பு முறைகளில் பரவலான முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது, போலி என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தங்கத்தில் ‘ரீனியம்’ பவுடர் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தங்கத்தில் ரீனியம் (Rhenium) என்ற உலோகப் பொடியைக் கலந்து எடையை அதிகரிக்கும் நூதன மோசடி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது, தங்கத்தின் எடையையும் தரத்தையும் போலியாகக் காட்ட ‘ரீனியம்’ (Rhenium) எனப்படும் உலோகத் தூளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் கலப்படம் செய்யப்படுவதாக இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) அதிர்ச்சியூட்டும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தில் பிற உலோகங்களை செயற்கையாக கலந்து கலப்படம் செய்து மோசடி செய்யப்படுவதாக வடமாநிலங்களில் சில பொற்கொல்லர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இந்த கலப்பட நகைகளுக்கு தரத்திற்கான ‘ஹால்மார்க்’ முத்திரையும் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த புகாரை நிரூபிக்கும் வகையில் பிரபல ஹந்தி தினசரி இதழ் ஒன்று ராஜஸ்தானில் உள்ள நகைக்கடைகளோடு இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டது. தங்க நகைகளில் நடைபெறும் புதிய வகை கலப்படத்தை அம்பலப்படுத்துவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி ரீனியம் என்ற உலோகப்பொடியை வாங்கி அதைக்கொண்டு தங்க நகைகள் உருவாக்கப்பட்டன. சுமார் 7 கிராம் தங்கத்துடன் 1 கிராம் ரீனியம் பொடியை கலந்து ஒரு சவரன் எடையில் நகைகள் தயாரிக்கப்பட்டன. இந்த நகையில் உண்மையான தங்கத்தின் அளவு சுமார் 81.73% (ஏறத்தாழ 20 காரட்) மட்டுமே இருந்தது.

இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட நகையை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஹால்மார்க் மையங்களில் சோதனைக்கு உட்படுத்தியபோதும், நகைக்கடைகளில் உள்ள வழக்கமான பரிசோதனை இயந்திரங்களில் (XRF machines) சோதித்தபோதும், அந்த இயந்திரங்களால் ரீனியம் கலப்படத்தைக் கண்டறிய முடியவில்லை. மாறாக, அந்த நகைக்கு 22 காரட் (916) ஹால்மார்க் சான்றிதழும் கிடைத்தது.

ரீனியம் பொடி கலந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு பவுனுக்கு ரூ.15,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரீனியம் பொடியில் தங்கத்தை உருக்குவதையும், மீண்டும் தங்கமாக வடிவமைத்த பிறகு அது அச்சு அசல் மாறாமல் தங்கமாக ஜொலிக்கிறது.

ரீனியம் உலோகத்தின் அடர்த்தி (Density) கிட்டத்தட்ட தங்கத்தின் அடர்த்திக்கு இணையாக இருப்பதால், எடை மற்றும் வழக்கமான கதிர்வீச்சு (XRF) பரிசோதனைகளில் இது தங்கத்தைப் போலவே காட்சியளிக்கிறது. எனவே இதை தற்போது உள்ள இயந்திரங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது.

இந்த பொடி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பை, கொல்கத்தா வழியாக இந்தியாவின் பிற ஊர்களுக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளது. 100 கிராம் எடை கொண்ட இந்த பொடியின் விலை ரூ.2 லட்சத்து 80 ஆயித்துக்கு மேல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தச் செய்தி நகை வாங்குவோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்திய புலனாய்வு அறிக்கைகள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கங்களின் தகவல்படி, இந்த மோசடியின் (தங்கக் கலப்படம்) முக்கிய அம்சங்களும், நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…

சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் ‘ரீனியம்’ என்ற உலோகப் பொடி, தங்கத்தை விடக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனைத் தங்கத்துடன் கலப்பதன் மூலம் நகையின் எடையைச் செயற்கையாக அதிகரித்து, முழு எடைக்கும் தங்கத்தின் விலையை வசூலித்து மோசடி செய்யப்படுகிறது.

ரீனியத்தின் அடர்த்தி (Density) தங்கத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதால், வழக்கமான XRF (X-ray fluorescence) கருவிகள் மற்றும் உரைகல் (Acid/Touchstone) சோதனைகளில் இது எளிதில் பிடிபடுவதில்லை. ராஜஸ்தானில் நடத்தப்பட்ட புலனாய்வில், ரீனியம் கலக்கப்பட்ட நகைகளுக்குக் கூட 22 காரட் (916) ஹால்மார்க் முத்திரை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

தங்கத்தின் உருகுநிலை 1,064°C ஆக இருக்கும் நிலையில், ரீனியத்தின் உருகுநிலை 3,186°C ஆகும். இதனால் சாதாரண நகைப் பட்டறைகளில் தங்கத்தை உருக்கும்போது ரீனியம் உருகாமல் உள்ளேயே தங்கிவிடும்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நற்பெயர் கொண்ட பாரம்பரிய நகைக் கடைகளில் மட்டுமே தங்க நகைகளை வாங்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நீண்ட கால நற்பெயர் கொண்ட நகைக்கடைகளில் மட்டுமே நகைகளை வாங்குவது பாதுகாப்பானது. சந்தேகம் ஏற்பட்டால் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் நகையை உருக்கி அல்லது ஆழமான சோதனைக்கு உட்படுத்தி உறுதி செய்யலாம்.

நீங்கள் வாங்கும் நகையில் உள்ள 6 இலக்க HUID (Hallmark Unique ID) எண் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, அதை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் BIS Care செயலியில் உள்ளிட்டு, அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும்.

நகை வாங்கும் போது ரொக்கத்திற்குப் பில் இல்லாமல் நகை வாங்குவதைத் தவிர்த்து, நகையின் எடை, தரம் மற்றும் ஹால்மார்க் விவரங்கள் அடங்கிய முறையான GST பில்லைக் கட்டாயம் பெற வேண்டும்.

சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையிலோ அல்லது நம்ப முடியாத சலுகைகளிலோ விற்கப்படும் தங்கத்தை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போது இந்த விவகாரம் குறித்து இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) ஆகியவை இந்திய தர நிர்ணய அமைவனத்திடம் (BIS) முறையிட்டு, பரிசோதனை முறைகளை மேலும் கடுமையாக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.