ஓணம் பம்பர் குலுக்கல் – முதல் பரிசு ரூ.30 கோடி

முதல் பரிசு ரூ. 30 கோடிக்கான கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று நடைபெறுகிறது.

கேரளத்தில் அரசு லாட்டரி டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகின்ற போதிலும் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பம்பர் குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு தான் முதன் முதலாக ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு டிக்கெட் விலை ரூ. 500 ஆகும். கடந்த ஜூலை மாதம் ஓணம் பம்பர் டிக்கெட் கடைகளுக்கு வந்த உடனே பரபரப்பாக விற்பனையாகத் தொடங்கியது. இம்முறை டிக்கெட் விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

கடந்த 2022ம் ஆண்டு 66.55 லட்சம் டிக்கெட்டுகளும், 2023ம் ஆண்டு 75.76 லட்சம் டிக்கெட்டுகளும், 2024ல் 71.50 லட்சம் டிக்கெட்டுகளும், கடந்த வருடம் 75 லட்சம் டிக்கெட்டுகளும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றுடன் அச்சடிக்கப்பட்ட 90 லட்சம் டிக்கெட் விற்பனையாகி விட்டதாக லாட்டரித் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ. 450 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் கடைகளில் டிக்கெட் காலியாகிவிட்டதால் கடைசி நாட்களில் டிக்கெட் வாங்கலாம் என்று கருதியிருந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகமாக நடந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்து டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர். லாட்டரி குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணியளவில் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. சிறிது நேரத்திலேயே ரூ. 30 கோடிக்கான அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிந்துவிடும்.