ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையில் மாநில அந்தஸ்து கோரி முதல்வர் உமர் அப்துல்லா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பேரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
இதில், கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயாட்சி தீர்மானம் குறித்த சில குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பாஜ எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுயாட்சி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க மாட்டோம் என முழக்கமிட்ட பாஜ எம்எல்ஏ.க்கள், தீர்மான நகல்களைக் கிழித்து எறிந்து அவையின் மையப்பகுதிக்குச் சென்று சுயாட்சி விவகாரம் குறித்த எந்த விவாதத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பெரும் கூச்சலை அடுத்து, சபாநாயகர் அவையை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய பின்னரும் அமளியில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏ விக்ரம் ரந்த்வாவை அவையில் வெளியேற்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் உத்தரவிட்டார். எனினும் தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.









