காஞ்சிபுரம் கோயிலில் தொடரும் வடகலை – தென்கலை மோதல்

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால் கடும் வேதனை அடைந்துள்ள பக்தர்கள், ” இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள உபசன்னதிகளான ஸ்ரீவேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நேற்றிரவு உற்சவம் நடைபெற்றது. அப்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் வெடித்தது.இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து அடிதடியில் ஈடுபட முயன்றனர். இதன்காரணமாக கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், அவை மதிக்கப்படவில்லை என இரண்டு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள தொடர் வாக்குவாதம் மற்றும் மோதல் காரணமாக கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் வேதனையும் அவதியும் பட்டனர். ‘இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கோயிலில் அமைதியான முறையில் உற்சவங்கள் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.