ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகுதியில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தங்குமிடமும், அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்.
லஷ்கர்-இ -தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் சைஃபுல்லாவுக்கு உள்ளூர் அளவில் முழு ஆதரவளித்து வந்தவர் நாயக். சைஃபுல்லா மற்றும் அவனது கூட்டாளிகள் தங்குவதற்கும், உணவருந்துவதற்கும், தேவையான பொருட்களைப் பெறுவதற்கும் நாயக்கே முக்கியக் காரணமாக இருந்துள்ளார். மேலும் தீவிரவாதிகள் சத்ரூ காட்டுப் பகுதியில் 2 ஆண்டுகள் வரை ஒளிந்திருக்க உதவியுள்ளார். அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சைஃபுல்லாவும் அவனது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், நாயக் பின்னணியில் இருந்து கொடுத்த உதவிகளால்தான் அவர்களால் இவ்வளவு காலம் உயிருடன் இயங்க முடிந்ததாகப் புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.
சத்ரூ பகுதியில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்குச் செய்யப்பட்ட உதவிகள் குறித்துப் போலீஸார் நடத்தி வரும் விசாரணையின் தொடர்ச்சியாகவே நாயக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் ஆதரவுக் கட்டமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதே வழக்கில் தீவிரவாதிகளுக்குத் தேவையான பொருட்களையும் தகவல் தொடர்பு உதவிகளையும் வழங்கி வந்த மஷ்கூர் அகமது என்ற பள்ளி ஆசிரியர் மற்றும் முனீர் அகமது ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்திருந்தனர்.
தற்போது இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதோடு, தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருக்கும் மற்றவர்களையும் பிடித்து, கிஷ்த்வார் பகுதியில் உள்ள தீவிரவாத ஆதரவு அமைப்புகளை முழுமையாக அழிக்கப் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.







