மதுரை மாவட்டம், மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். பள்ளி படிப்பை முடித்த இவர், லேபர் வேலைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தொடர்புடையவர்களின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து எப்க்யூஎல் எக்சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோரிடம் ரூ.1,000 கோடி வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மேலூர், நத்தம் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மோசடி கும்பலுடன் இணைந்து இச்சம்பவம் நடந்துள்ளதால் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடி தொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலீடு பணம் யாரிடம் சென்று சேர்கிறது என்பதை யாருமே எளிதில் அறிய முடியாத வகையில், கிரிப்டோ மிக்சர் என்ற முறையில் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றியுள்ளனர். பின்னர் தங்களோடு தொடர்புடைய உலகின் பல பகுதிகளில் உள்ள போலியான கிரிப்டோ வாலட்டிற்கு ஒவ்வொரு முதலீட்டு பணத்தையும் தனித்தனியாக பிரித்து அனுப்புவர். இதன் மூலம் எந்த கணக்கில் இருந்து எந்ததெந்த கணக்கிற்கு கிரிப்டோ கரன்சி கைமாறியது என்பதை யாராலும் சுலபமாக கண்டறிய முடியாது. இறுதியில் துபாய், சீனாவின் ஹாங்காங் போன்ற பகுதிகளுக்கு சென்றடையும். ஏனெனில் சர்வதேச அளவிலான கிரிப்டோ ஏஜென்சிகள் மற்றும் கிரிப்டோ புரோக்கர்களின் வர்த்தக மையங்களாக இவை உள்ளன. இங்கு தான் கிரிப்டோ வர்த்தகம் அதிகளவில் நடக்கிறது.
ஓடிசி (ஓவர் த கவுன்டர்) எனப்படும் கிரிப்டோ புரோக்கர்கள், எந்த கேள்வியோ, விளக்கமோ இன்றி கிரிப்டோ பணத்தை வாங்கிக் கொண்டு ரொக்கமாகவோ, குறிப்பிட்ட நாடுகளில் உள்ள சொத்துக்களையோ பதிவு செய்து கொடுப்பர். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகைகள் மட்டும் கமிஷனாக கழிக்கப்படும். இதனால், பரவலாக பல பகுதிகளில் தங்களது விற்பனையை மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிவைத்து கிரிப்ேடா மோசடி அரங்கேற்றப்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால், ரஞ்சித் மேலும் பல செயலிகளை உருவாக்கியுள்ளார். மனைவி பிரியதர்ஷினி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலம் இத்தொழிலை விரிவடைய செய்துள்ளார். இதன்படி, தனது மனைவியை தலைமையாக்கி விஜி என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.
எப்க்யூஎல் செயலியில் சேர்ந்தவர்கள், அதில் முதிர்வுத் தொகை பெற்றவர்கள் என அனைவரையும் ஆசை வலைக்குள் சிக்க வைத்து தனது விஜி செயலியில் முதலீடு செய்ய வைத்துள்ளார். இந்த செயலி மூலம் குறிப்பிட்ட சில பண பரிவர்த்தனைகள், வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்கள் மீதான பிடி இறுகுவதை அறிந்த ரஞ்சித் – பிரியதர்ஷினி ஜோடி தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மோசடி தொடர்பாக, சிவகங்கை பையூரை சேர்ந்த ரமேஷ், மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டியை சேர்ந்த சதீஷ், காசம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (30), ஜெயபிரகாஷ் (28), பிரேம்நாத் (26), விஜயன் (49), மகாதேவன் ஆகிய 7 ஏஜென்ட்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.ரஞ்சித் மற்றும் ஏஜென்ட்கள், முதலீட்டாளர்களிடம் எப்க்யூஎல் நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு சோரஸ் என கூறியுள்ளனர். இவரும் அவ்வப்போது ஆன்லைனில் வந்து நிறுவன ஏஜென்ட்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் பேசியுள்ளார். ஒரே நேரத்தில் பல நாட்டின் சர்வர்கள் மூலம் இயக்கப்படும் இவர்களின் செயலி குறிப்பிட்ட நாட்டில் இருந்து தான் இயங்குகிறது என யாராலும் கண்டறிய முடியாது. அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நொடிக்கு நொடி ஐபி முகவரி மாறிக்கொண்டே இருக்கும்.









