அமெரிக்காவில் உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது உலகின் மிக பெரிய ஜெனரிக் மருந்து ஏற்றுமதி நாடான இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடந்தாண்டு அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற உடனேயே உலக நாடுகள் மீது வரிகளை அறிவித்து அதிர விட்டார் டிரம்ப். அந்த வரிகளை அமெரிக்க நீதிமன்றம் செல்லாது என அறிவித்த போதிலும், டிரம்ப் அடங்குவதாக தெரியவில்லை. இதற்கிடையே அமெரிக்காவில் உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.அதன்படி இந்த முறை இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு மிக பெரிய சுங்க வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவின்படி 200% வரை வரி விதிக்கப்படும். உள்நாட்டில் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் இந்த வரிகளை அறிவித்துள்ளார். அதேநேரம் இந்த வரி உடனடியாக அமலுக்கு வராது. 2028ஆம் ஆண்டு முதல் இந்த வரி படிப்படியாக அமலுக்கு வரும்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்த புதிய திட்டத்தின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு இப்போது போலவே 0 சதவீத சுங்க வரி தொடரும் என்று கூறியுள்ளார். இருப்பினும், மூன்றாவது ஆண்டில்.. அதாவது 2028ல் 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும். அதன் பின்னர் 200 சதவீதமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஜெனரிக் மருந்து உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவில் அமைக்காமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கவே இந்த வரியை அறிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், “அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலைகளை அமைக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த காலத்திற்குள் முதலீடு செய்யாத நிறுவனங்கள் அதிக சுங்க வரியை செலுத்த வேண்டியிருக்கும். இது அமெரிக்க மக்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கை. காப்புரிமை பெற்ற, பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவை பாதிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, குறைந்த விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் சுமார் 40 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து வருகிறது.
2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 9.7 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் சுமார் 38 சதவீதம் ஆகும். பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், மனநல பாதிப்புகள், தொற்று நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இந்த வரி இந்திய நிறுவனங்களுக்கு மிக பெரிய ஒரு அடியாகவே இருக்கும்.
அதேநேரம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது. அதில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தொடர்பாக இந்தியாவுக்கு சலுகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருக்கும்போது டிரம்ப் இப்போது புதிய வரியை அறிவித்துள்ளார். எனவே, இந்தியாவுக்கு வரி விதிக்கப்படுமா இல்லையா என்பதில் குழப்பமே இருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கர்களுக்குமே கூட இந்த வரி பாதிப்பு தான். ஏனென்றால் அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் உச்சத்தில் இருக்கும். எனவே, பெரும்பாலான அமெரிக்கர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ஜெனரிக் மருந்துகளை நம்பி இருக்கிறார்கள். இந்த கூடுதல் வரி அறிவிப்பு அவர்களையே மோசமாக பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.







