பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ , வழக்கமான ஒரு பருவநிலை சுழற்சி மாற்றத்தை விட மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட சுமார் 40 சதவீதம் அதிக வலிமை கொண்டவையாகவும், கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமானதாகவும் உருவெடுத்துள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீர் இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே ‘எல் நினோ’ எனப்படுகிறது. இது பெருங்கடல் பகுதியைத் தாண்டி காற்று வீசும் திசை, மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையைப் பெருமளவில் மாற்றியமைக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக வறட்சி, அதீத மழை, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, உணவுப் பற்றாக்குறை போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கலாபகஸ் தீவுகளில் உள்ள 13 நவீன மற்றும் பழங்கால பவளப்பாறைகளின் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பவளப்பாறைகளின் வேதியியல் கட்டமைப்பானது பல தசாப்தங்களாக நிலவிய கடல் நீரின் வெப்பநிலை மாற்றங்களை அப்படியே தமக்குள் சேமித்து வைத்துள்ளன. கடந்த 4 முதல் 5 தசாப்தங்களில் எல் நினோவின் தீவிரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் எல் நினோ நிகழ்வுகள் குறைந்த தீவிரத்துடனேயே இருந்துள்ளன.
இதுகுறித்து மிச்சிகன் பல்கலை. முதன்மை ஆய்வாளர் ஜூலியா கோல் கூறுகையில், கடந்த காலத்தில் எல் நினோ நிகழ்வுகள் இன்றைக்கு இருப்பதைப்போல இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. புவி வெப்பமயமாதல் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கு இணையாக எல் நினோவின் வலிமையும் மாறி வருகிறது என்பதை எங்கள் ஆய்வு நிரூபித்துள்ளது என்றார். எல் நினோ தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வரலாற்று ரீதியாக, எல் நினோ உருவாகும் காலங்களில் இந்தியாவில் பருவமழை பொய்த்துப் போவதும், வெப்பநிலை அதிகரிப்பதும், நீண்ட வறட்சி நிலவுவதும் வழக்கம்.
வானிலை ஆய்வு மையங்கள் எல் நினோ உருவாவதை உறுதிசெய்து, பருவமழைக் காலத்தில் மேலும் தீவிரமடையும் என்று கணித்திருந்தன. நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை இதன் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பருவமழை இயல்பை விடக்குறைவாக பதிவாகி பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் எல் நினோ உருவாகுமா என்பது கேள்வியல்ல; அது எவ்வளவு தீவிரமாக இருக்கும், அதன் பாதிப்புகள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்பதே முக்கியக் கேள்வி என்று ஜூலியா கோல் குறிப்பிட்டார்.
எல் நினோவிட, ஏற்கனவே வெப்பமடைந்து வரும் பூமியில் அது ஏற்படுத்தும் தாக்கமே மிகப் பெரிய கவலையாக உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிகழ்வு புவி வெப்பமயமாதலுடன் இணைந்து செயல்படுவதால், பசுமைக்குடில் வாயுக்களால் வழக்கமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வை விட இது பன்மடங்கு வெப்பத்தை அதிகரிக்கும். தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தை விட உலக வெப்பநிலை 1.7 முதல் 1.8 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. புவி வெப்பமயமாதல் எல் நினோவை மேலும் தீவிரப்படுத்துகிறது; இதனால் சுற்றுச் சூழல், உட்கட்டமைப்பு மற்றும் மனித உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர் ஜூலியா கோல் எச்சரித்துள்ளார்.









