புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு ரத்து ஒன்றே தீர்வு. நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. முறைகேடு செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பம் முதலே திமுக எச்சரித்து வந்தது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
புது டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு முறையானது பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் இயக்கம் திமுக. அதனால்தான், இத்தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது.
சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: தேர்வை ரத்து செய்தல் என்பதே ஆகும்.மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இச்சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.









