அறங்காவலர் குழுவினர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக சத்யப்பிரியா பாலாஜி இருந்து வந்த நிலையில், அவரும் அறங்காவலரர் குழு உறுப்பினர்களும் திடீரென கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ராஜினாமாவிற்கான காரணம் எதையும் கூறவில்லை.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2024 ஆம் ஆண்டு முதல் அறங்காவலர் குழு தலைவராக சத்யப்பிரியா பாலாஜி இருந்து வருகிறார். அறங்காவலர்களாக சண்முகசுந்தரம், மணி செல்வன், பொம்ம தேவன், ராமையா ஆகியோர் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் முடிந்த நிலையில், பதவிகாலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, இவர்களுக்கான பதவிக்காலம் 2028 வரை உள்ளது. பிப்ரவரி மாதம் அறங்காவலர்கள் பதவியேற்று இருந்தனர். பதவியேற்று 5 மாதமே ஆகியுள்ள நிலையில், திடீரென்று அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளது கோயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக நேற்று கோயிலுக்கு திடீரென வந்த சத்யப்பிரியா பாலாஜி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கோவில் அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அறங்காவலர்கள் குழுவில் இடம் பெற்று இருந்த சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். பொம்மத்தேவன் என்பவர் மட்டும் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. அவரும் விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. பொம்மத்தேவன் வெளியூர் சென்று இருப்பதாகவும், நாளை அல்லது அதற்கு அடுத்த நாட்களில் பொம்மத்தேவன் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. பதவிக்காலம் முடியும் முன்பே அறங்காவலர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து இருப்பது கோயில் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் நில முறைகேடு தமிழகம் முழுக்க பரபரப்பை கிளப்பியிருக்க கூடிய நிலையில், திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் திடீர் ராஜினாமா பேசுபொருளாகியுள்ளது. திடீர் ராஜினாமா செய்தது ஏன்? என்பதற்கு எந்த காரணத்தையும் அவர்கள் கூறவில்லை.