பழனி கோயில் நில மோசடி வழக்கில் எட்டு பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல் துறை, புகாரில் சிக்கிய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தினர். அதன்படி, திண்டுக்கல், பழனி, திருப்பூர், விழுப்புரம், நெல்லை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.விழுப்புரம் சாலாமேடு பகுதியில் வசித்துவரும் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகதாஸ் வீட்டில் நடந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரது வீட்டை பூட்டி சீல் வைத்தனர். பழனியில் மடம் நடத்திவரும் முருகதாஸ், கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து முறைகேடாக விற்பனை செய்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர்ந்து, முருகதாஸ், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த மேடை அலங்கார தொழிலாளி சண்முகசுந்தரம், குமரகுரு, சிவக்குமார், பழனியைச் சேர்ந்த இருவர் என மொத்தம் எட்டு பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, துருவி துருவி கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள், அவர்கள் தெரிவித்த பதில்களை ஆவணப்படுத்தி வீடியோவாக பதிவு செய்தனர்.









