தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் விஜய் தனது நன்றியைத் தெரிவிக்கவுள்ளார். வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் எதிர்கால மக்கள் நலப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர் குறித்தும் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. கூட்டணி ஆட்சி எவ்வித கருத்து வேறுபாடுகளும் இன்றி, சுமுகமாகவும் சிறப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய ‘ஒருங்கிணைப்புக் குழு’ ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யு.எம்.எல், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். ஆகிய கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன. மேலும், சமீபத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க. இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








