மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வி அமைச்சராக இலாகா மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது தொடர்ச்சியாகச் சர்ச்சைகள் எழுந்த வன்னம் இருந்தன. இதன் கரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்கிடையே விசிக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான து. ரவிக்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடந்த 26ஆம் தேதி வெளியிட்டிருந்த பதிவில், ‘நிதி அமைச்சர் மாற்றப்படுகிறாரா?.
நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சர் ஆக்கப்படப்போவதாக செய்திகள் வெளியாகின்றன .மோடி அரசின் படுதோல்வித் திட்டமான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு (demonetisation ) நடவடிக்கையின் நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியாவின் பொருளாதார நிலை என்ன ஆகுமோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி ரவிக்குமார் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கல்வி அமைச்சர் ஆகிறார் என்கிறார்கள். வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.








