மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச.

ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், ‘வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளிலும் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் கூட்டங்களை முறையாகவும், கனிவுடனும் நடத்த வேண்டும். மனு அளிக்க வருகிற மக்களிடம் அன்போடு குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து தீர்வு வழங்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள் பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான சான்றிதழ்களைப் பெறவே அலுவலகங்களுக்கு வருகிறார்கள். அவர்களை நம் வீட்டில் உள்ளவர்களைப் போல மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் நடத்தினாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மக்களுக்கு வங்கிச் சேவைகள் ஒழுங்காக கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்களுடன் கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்களைப் பொறுத்தவரை, திங்கட்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை நேரங்களில் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும். மனுக்களைப் பெறுவது மட்டுமே மாவட்ட ஆட்சியரின் பணி அல்ல. தொடர் கண்காணிப்பும் மிகவும் முக்கியமானது. அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் குறைகளை கேட்பதைவிட, அவற்றைத் தீர்ப்பதே மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டங்களை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். முக்கியமான ஒவ்வொரு வழக்கிலும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, குற்றவாளிகள் தப்பித்துவிடாத வகையில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆலோசித்து, எந்த ஒரு சம்பவமும் நடைபெறுவதற்கு முன்பே அதன் மூலக் காரணங்களை கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.