திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தபோது, அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்த நிலையில், தற்போது இயற்கை முறையில் பிரசவம் பார்க்க கணவனும் மனைவியும் சேர்ந்து முடிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது. உறவினர் யாருடைய ஆலோசனையையும் அவர்கள் ஏற்கவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்ப்பிணிப் பெண்கள் முறைப்படி பதிவு செய்தால், 12வது வாரத்திலிருந்து குழந்தை பிறந்த பின்பும் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி, மருந்துகள், உதவித்தொகை தருவது பற்றி அறிந்திருந்தும் இவை எதையுமே அவர்கள் செய்யவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டில் பிரசவம் பார்ப்பதில் தாய், சேய் இருவருடைய உயிருக்கும் ஆபத்துக்கள் இருப்பதாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள கிராமம் புஞ்சைதளவாய்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைசாமி (வயது 40), அவருடைய மனைவி சசிகலா (வயது 32) இருவரும் பொறியியல் பட்டதாரிகள். குழந்தைசாமி தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு 6 வயதுடைய பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார்.
சசிகலா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் அவரின் நிலைமை கவலைக்கிடமாகி, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு, ஜூன் 28 அன்று உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை புகாரின்படி, ஊத்துக்குளி காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி காவல்துறையினர் அளித்த தகவலில், கணவன்-மனைவி இருவரும் உறவினர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் சுயமாக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சரவணன், ”ஜூன் 23 அன்று இரவு 9:45 மணிக்கு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், அவருடைய தாய், தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனே வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய சசிகலா, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டாம். நாங்களே பிரசவம் பார்த்துக்கொள்கிறோம். கூப்பிடும்வரை வரவேண்டாமென்று கூறியுள்ளார். அதனால் அவர்கள் இரவு முழுவதும் வீட்டின் உள்ளே செல்லாமல் வெளியில் காத்திருந்துள்ளனர்.” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ”பிரசவம் பார்க்க சசிகலாவும், அவருடைய கணவரும் மட்டும் ஒரு அறைக்குள் சென்றுள்ளனர். சசிகலாவின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் இயற்கை முறையில் பிரசவம் பார்க்கின்ற முயற்சி பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் அதில் உடன்பாடு இருந்ததா என்று தெரியவில்லை. அவர்களிடம் மகள் இறந்தது பற்றி புகார் கொடுக்குமாறு கேட்டபோது, மறுத்துவிட்டனர்.” என்றார்.
அதன்பின்பே குன்னத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் நித்யாவிடம் காவல்துறையினர் புகார் பெற்றுள்ளனர். முதற்கட்டமாக குழந்தைசாமி மீது மட்டும் கொலையாகாத மரணத்தை விளைவித்தல், முறைப்படி மருத்துவம் படித்து பதிவு செய்யாமல் மருத்துவம் பார்த்ததற்காக தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் சரவணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, ஜூன் 23 இரவு 10 மணிக்கு மேல், குழந்தைசாமி மட்டுமே தனியாக யூடியூப் பார்த்து சசிகலாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். மறுநாள் அதிகாலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்குப் பின்பு சசிகலாவுக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமாகியுள்ளார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர்கள் முதலுதவி சிகிச்சையளித்துவிட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கே சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அங்கிருந்து அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் குழந்தைசாமியின் குடும்பத்தார், சசிகலாவை கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார். பிறந்த பெண் குழந்தை, தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
சசிகலா-குழந்தைசாமிக்கு 2019 பிப்ரவரி 23 அன்று திருமணம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டில் சிசேரியன் முறையில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அலோபதி மருத்துவத்தின் மேல் தனது மனைவி சசிகலா நம்பிக்கையின்றி இருந்ததாக குழந்தைசாமி தெரிவித்ததாக ஊத்துக்குளி காவல்துறையினர் பகிர்ந்த தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை கர்ப்பமாகி ஒரு முறை கூட அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மாமனார், மாமியாரிடம் மட்டுமின்றி, தன்னுடைய பெற்றோரிடமும் முன்பிருந்தே வீட்டிலேயே நான் பிரசவம் பார்த்துக் கொள்ளப்போகிறேன் என்று சசிகலா சொல்லி வந்ததாகவும் காவல்துறை பகிர்ந்த ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது. இதையே சுகாதாரத்துறையினரும் கூறுகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திருப்பூரில் இந்த உயிரிழப்பு நடந்துள்ளதால், சுகாதாரத்துறையினர் இதுபற்றி தீவிரமான கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 மாவட்டங்கள் தொடர்புடையதால் 3 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் அறிக்கை பெறப்படுமென்றார் திருப்பூர் மாவட்ட இணை இயக்குநர் கண்ணன் மகராஜன்.
பிபிசியிடம் பேசிய அவர், ”குழந்தை வெளியே வந்த பின்னும் நஞ்சுக்கொடி (Placenta) வெளியில் வராமல் இருந்துள்ளது. அதனால் இரத்தப்போக்கு அதிகமாகியுள்ளது. அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே அந்த நஞ்சுக்கொடியை மட்டும் எடுத்துவிட்டு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு செல்லும்போதே சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைத்துள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனை சென்றுவிட்டனர். இறந்தவரின் வீடு திருப்பூரிலும், சிகிச்சை பெற்ற பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஈரோடு மாவட்டத்திலும், மேல் சிகிச்சை பெற்று இறந்த தனியார் மருத்துவமனை கோவையிலும் இருப்பதால் 3 மாவட்ட அதிகாரிகளாலும் இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. ” என்றார்.








