தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மொஹரம் பண்டிகைக்கான அரசுப் பொது விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் முதலில் திருச்செந்தூர் கடலிலும், அதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.

பக்தர்களின் வருகை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருந்ததால், பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய அதே வேளையில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் இரயில் பயணிகள் நேற்று கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

நெல்லை இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இரயில்வே யார்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூரிலிருந்து நெல்லை மார்க்கமாகச் செல்ல வேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளியூர்களிலிருந்து கோயிலுக்கு வந்திருந்த ஆன்மீகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உரிய நேரத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் அவதிக்குள்ளாயினர்.

நேற்று தொடங்கிய இந்த விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்த வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், தற்காலிகக் கழிப்பறை வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் பணிகளைத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், மாவட்டக் காவல் துறையும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.