தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார்.இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசி இருந்தார். இந்த இரு நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்த போது, பல்வேறு திட்டங்கள் மற்றும் மற்றும் பல்வேறு அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது, இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இவர்களுக்கு, துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 12- ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். பின்னர், இன்றைய கூட்டம் நிறைவடைவதாக பேரவை தலைவர் அறிவித்தார். தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 13- ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 14- ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும், அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ச்சியாக 4 நாட்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. அன்றைய தினம் முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மற்ற துறைகள் வாரியான கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தெரிவித்தார்.







