இனி வீட்டில் இருந்த படியே பத்திரம் பதிவு செய்யலாம்

மிழ்நாட்டில் சொத்து ஆவணங்களை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் நோக்கில் வருகை இல்லா ஆவணப்பதிவு” என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவையின் மூலம் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஆவணங்கள், வங்கிக் கடன்களுக்கான அடமான ஆவணங்கள் மற்றும் அடமான விடுவிப்பு ரசீதுகள் போன்றவற்றை தடையின்றி பதிவு செய்யலாம். இது சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூடுவதையும், நீண்ட நேரம் காத்திருப்பதையும் தவிர்த்து, பதிவுத் துறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் வேகமான சேவையையும் உறுதி செய்கிறது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த பொதுமக்கள் முதலில் TNREGINET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயனர் கணக்கை உருவாக்கி, சொத்து ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஆவணத்தை வழங்குபவர், பெறுபவர் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை UIDAI அங்கீகரிக்கப்பட்ட L1 கைரேகை பதிவு கருவி அல்லது கருவிழி பதிவு கருவி மற்றும் வெப்கேம் ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க வேண்டும். பதிவேற்றப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர் ஆன்லைனில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தவுடன், மின்னணு கையொப்பத்துடன் கூடிய பதிவு ஆவணம் பயனர் கணக்கிலும், பயனரின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும்.இச்சேவையைப் பயன்படுத்தத் தேவையான பயோமெட்ரிக் கருவிகள் இல்லாதவர்கள், அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 24 மணி நேரமும் தடையற்ற சேவை, காகிதமில்லா டிஜிட்டல் முறை, தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயம் குறைதல் போன்ற பல நன்மைகள் பொதுமக்களுக்குக் கிடைக்கின்றன. இந்த இணையவழி பதிவு முறை முழுமையாகக் கட்டாயமாக்கப்படும் தேதி குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைத் தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.