தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ‘வல்லாரை’ கீரை அனுப்ப வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு ஞாபக சக்தியை வலுப்படுத்தும் வல்லாரை கீரை அனுப்ப தமிழ் புலிகள் கட்சியினர் வந்தனர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் ஜோசப் விஜய், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். இதனிடையே முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் உள்ளிட்ட மூவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தபால் நிலையத்துக்கு வந்தனர். அங்கு தபால் மூலமாக, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றனர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “பெண்களுக்கு மாதம் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் கொடுத்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.
பொதுவாகவே ஆட்சி அமைக்கும் முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனேயே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆனால் இங்கு அப்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. முதலமைச்சர் விஜய், தேர்தலுக்கு முன்பாக தான் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார்.இது தவிர, அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, தற்போது ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றனர். வாக்குறுதிகளை செயல்படுத்த மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து நிறுத்துகின்றனர். இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் 3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்றே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.









