லட்சத்தீவில் மதுவிற்கு அனுமதி

லட்சத்தீவில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். இதனால் இந்தியாவில் மதுபானம் விற்க தடை உள்ள பகுதிகளில் ஒன்றாக லட்சத்தீவு கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது.

இந்நிலையில் தான் இந்த தடையை நீக்கி மதுபானம் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக லட்சத்தீவு உள்ளது. இது நம் நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த லட்சத்தீவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு இஸ்லாமியர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். லட்சத்தீவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 97 சதவீதம் இஸ்லாமியர்கள் தான். 3 சதவீதம் தான் மற்றவர்கள்.

இந்நிலையில் தான் லட்சத்தீவு சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட கவரத்தி, பங்காரம் ஆகிய தீவுகளில் மட்டும் அரசு சார்பில் ‘பார்’ உள்ளது. மீதமுள்ள இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. கடந்த 1979 ம் ஆண்டு முதல் கடந்த 47 ஆண்டுகளாக இந்த தடை நீடித்து வருகிறது. ‘லட்சத்தீவு மதுவிலக்கு ஒழுங்குமுறை சட்டம் 1979’ன் படி இந்த தடை உத்தரவு உள்ளது.

தற்போது மத்திய அரசு ‘லட்சத்தீவு மதுவிலக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1979யை ரத்து செய்து ‘லட்சத்தீவு கலால் ஒழுங்குமுறைச் சட்டம் 2026’யை கொண்டு வந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உரிமம் பெற்று லட்சத்தீவின் பிற இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? என்று பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான விடை என்னவென்றால் லட்சத்தீவை சுற்றுலா துறையில் முன்னேற்றம் செய்யவும், பிரபலப்படுத்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லட்சத்தீவை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக அண்டை நாடான மாலத்தீவுக்கு (Maldives) போட்டியாக லட்சத்தீவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மதுபான வசதி ஒரு முக்கிய தேவையாகக் கருதப்படுவதால், இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மது விற்பனை மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும். புதிய கலால் கொள்கையின்படி (Excise Policy 2026) இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு (IMFL) 400% கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு 200% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி வருவாய் தீவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.