தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை (ஆலந்தூர், விருகம்பாக்கம்), மயிலாடுதுறை (கச்சேரி சாலை), விருதுநகர், சாத்தூர், கோவை (தொண்டாமுத்தூர், காந்திபுரம்), தர்மபுரி, தேனி (போடி), ராமநாதபுரம் (பரமக்குடி), விழுப்புரம், கள்ளக்குறிச்சி (மணலூர்பேட்டை), ஓசூர் (சூளகிரி), வேலூர் (வேலப்பாடி) மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் கதவுகள் பூட்டப்பட்டு பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் விக்கிரமசிங்கபுரம் உட்பட 3 இடங்களில் கூடுதல் எஸ்.பி தலைமையில் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் சிக்கியது.இந்த அதிரடி சோதனையின் விளைவாக, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
அலுவலகங்களில் இருந்த அதிகாரிகளின் பணத்தை ஆய்வு செய்த போலீஸார், கணக்கில் வராத கட்டுக்கட்டான லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் ரூ.1.20 லட்சம், மதுரை விளாங்குடியில் ரூ.90,000, திருச்சி (துறையூர், திருவெறும்பூர்) ரூ.80,000, விருதுநகரில் ரூ.54,000, சாத்தூரில் ரூ.20,000 எனப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்திற்கான கணக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







